Home>>இந்தியா>>கட்டாயத் தடுப்பூசி: பொறுப்பேற்க மறுக்கும் இந்திய அரசு!
இந்தியாஉடல்நலம்செய்திகள்தமிழ்நாடுமருத்துவம்வரலாறு

கட்டாயத் தடுப்பூசி: பொறுப்பேற்க மறுக்கும் இந்திய அரசு!

மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. கி. வெங்கட்ராமன் அவர்கள் கண்டனம்!


கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக கோவிட்-19 நோயால் ஏற்பட்ட பாதிப்பு அச்சமூட்டிய சூழலைப் பயன்படுத்தி, இந்திய அரசும், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் கட்டாயத் தடுப்பூசித் திட்டத்தைச் செயல்படுத்தின.
கோவிட்-19 தடுப்பூசியில், இறப்பு மற்றும் மீளமுடியாத நோய்கள் மற்றும் உடல் பாதிப்புகள் ஏற்பட்டு வருவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், நேற்று (29.11.2022) பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ள இந்திய அரசு, “கோவிட்-19 தொடர்பான தடுப்பூசிகள் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் மரணம் குறித்தோ, உடல் ஊறு குறித்தோ இந்திய அரசு பொறுப்பேற்க முடியாது. அவ்வாறு பொறுப்பேற்குமாறு நீதிமன்றமும் வலியுறுத்த முடியாது” என்று வாதிட்டுள்ளது.

ஏற்கெனவே உச்ச நீதிமன்றம், டாக்டர் ஜேக்கப் புல்லியல் – எதிர் – இந்திய ஒன்றிய அரசு (Writ Petition (Civil) No. 607 of 2021) என்ற இவ்வழக்கில், கட்டாயத் தடுப்பூசி கூடாது எனத் தீர்ப்புரைத்தது. அந்த வழக்கில்கூட, இந்திய அரசு கோவிட்-19 தடுப்பூசி யார் மீதும் கட்டாயப்படுத்தப்படவில்லை, மக்கள் தடுப்பூசியைப் பயன்படுத்து மாறு அரசு வலுவாக ஊக்கப்படுத்தி தான் வருகிறது என்று பொய்யுரைத்தது.

குறிப்பாக, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பள்ளிச் சிறார்கள் தொடங்கி, முதியோர் வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதை ஊரறியும்.

இதுகுறித்து, கேள்வி எழுந்தபோதெல்லாம் இந்திய அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுக்குக் கொடுத்துள்ள ஆணையைத் தான் தமிழ்நாடு அரசும் எடுத்துக்காட்டியது.

“வலுவாக ஊக்கப்படுத்துவது” என்ற பெயரால், தடுப்பூசி போடாதவர்கள் தொடர்வண்டியில் ஏறக்கூடாது, பொதுப் போக்கு வரத்திற்கு வரக்கூடாது, பொது இடங்களுக்கும், சந்தைகளுக்கும் வரக்கூடாது என்று நிர்பந்திக்கப்பட்டதை நீதிமன்றத்தில் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் மறைத்துப் பொய் கூறின.

கோவாக்சின் உள்ளிட்டு கோவிட்-19 தடுப்பூசி தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும், இத்தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதால் ஏற்படும் மரணம் உள்ளிட்ட தீய விளைவுகள் குறித்து, சட்ட சடங்காக சில மேலோட்டமான தகவல்களைத் தெரிவித்துவிட்டு, இறுதியில் அவ்விளைவுகளுக்குத் தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்பதை அறிவித்துவிட்டன.

பெருங்குழும மருத்துவமனைகள் உள்ளிட்டு, தனியார் மருத்துவ மனைகள் அனைத்தும், கோவிட்-19 தடுப்பூசியின் தீய விளைவுகளுக்குப் பொறுப்பேற்க மறுத்தன.

இப்போது மீண்டும், இந்திய அரசும் மறுத்திருக்கிறது.

கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டோர், அதன் தீய விளைவுகள் குறித்து, நேரடியாகப் புகார் தெரிவிக்க வாய்ப்புகள் பெரிதும் அடைக்கப்பட்ட சூழலில் – அரசின் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவர் வழியாகத்தான் புகார் கொடுக்க முடியும் என்று நிர்பந்திக்கப்பட்ட சூழலில், இத்தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவர வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இப்போது, அதையே சான்றாகக்கூறி, தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்பு ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு என இந்திய அரசு பொய்யுரைக்கிறது.

இந்திய அரசின் இந்தப் பொய்யுரையை உச்ச நீதிமன்றம் ஏற்கக் கூடாது! இதற்கென்று, மருத்துவர்கள் உள்ளிட்ட வல்லுநர் குழுவை அமர்த்தி, தமிழ்நாடு உள்ளிட்டு இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கோவிட்-19 தடுப்பூசியால் ஏற்பட்ட தீய விளைவுகள் குறித்து, தற்சார்பான ஆய்வு நடத்தி, உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும்.

மரணம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டோருக்கு ஒன்று, அம்மருத்துகளைத் தயாரித்த நிறுவனமோ அல்லது அரசோ பொறுப்பேற்க வேண்டும் என ஆணையிட வேண்டும் என்று மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


செய்தி உதவி:
மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு,
தொடர்புக்கு – 98419 49462, 99765 37443

Leave a Reply