Home>>கலை>>வாழ்க்கை ஒரு வட்டம் – அது செக்குமாடு மாதிரி ஒரே இடத்துல சுத்தும்
கலைதிரைத்துறை

வாழ்க்கை ஒரு வட்டம் – அது செக்குமாடு மாதிரி ஒரே இடத்துல சுத்தும்

A DAY - Korean MovieA Day (கொரியன் – 2017)
A Time loop (நேர வளையம்)

உலக திரைப்படங்கள் என்றால் அது அமெரிக்காவில் ஆங்கில மொழியில் எடுக்கப்படும் படங்கள்தான் என்ற பொதுவான கண்ணோட்டம் திரை ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக உள்ளது. அதற்கேற்றாற்போல பல நல்ல திரைப்படங்கள் அங்கே வந்தன.

ஆனால் அமெரிக்காவில் வெளிவரும் படங்களை விட பல நல்ல உலகத்தரம் வாய்ந்த படங்கள் ஈரானிய மொழியில் வரத் தொடங்கியதை பார்த்து உலகத்திரை ரசிகர்கள் வியந்தனர். அமெரிக்க திரையுலகமும் வியந்து ஆஸ்கர் விருதுகளும் கொடுத்து அவர்களை அங்கீகரிக்க தொடங்கியது.

அதே போல தென் கொரியமொழிப்படங்களும் பல உலகத்தரம் வாய்ந்த படங்களை தொடர்ந்து கொடுத்து உலக திரை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

Parasite என்ற படத்திற்கு கிடைத்த உலக அங்கீகாரதிற்கு பிறகு கொரிய மொழிப்படங்களின் மீது பலர் கவனம் திரும்பியுள்ளது. அதற்கேற்றார்போல் கணக்கிலடங்கா பல நல்ல திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

அந்த வரிசையில் 2017ல் Cho Sun-ho இயக்கத்தில் வெளிவந்த “A Day”, உலகத் திரை ரசிகர்கள் தவறவிடக்கூடாத அவசியம் காண வேண்டிய படம்.

ஒரு திரைப்படத்திற்கு மிக முக்கியமானது அதன் திரைக்கதை. அந்த திரைக்கதையில் எவ்வளவு புதுமைகளை செய்ய முடியுமோ, எவ்வளவு யுக்திகளை கையாள முடியுமோ அதை பொறுத்து அந்த திரைக்கதை பலராலும் கவனிக்கப்படும். Flash back, Time travel, non linear, Rashomon effect உள்ளிட்ட பல்வேறு யுக்திகள் உள்ளன. இவை யாவும் நம் இந்திய திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுவிட்டன.

அப்படி இதுவரை இந்தியத் திரையுலகம் பயன்படுத்தாத ஒரு திரைக்கதை யுக்தி.

“Time loop (நேர வளையம்).
இதைப்பற்றி ஒரே வார்த்தையில் விளக்கனும்னா,

“வாழ்க்கை ஒரு வட்டம்.அது செக்குமாடு மாதிரி ஒரே இடத்துல சுத்தும்”

போனா திரும்ப வராத ஒன்று காலம். ஆனால் mp3 playerல repeat mode ல போடப்பட்ட பாட்டு போல திரும்பத்திரும்ப நம்ம வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நேரம் திரும்பத்திரும்ப சுத்திக்கிட்டே இருந்தா எப்படி இருக்கும்?? அதான் இந்த திரைப்படத்தின் கரு.சுருக்கமா சொன்னா அரைத்த மாவையே அரைக்கிறது.

தென்கொரியாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவர் ஒரு நீண்ட உலக சுற்றுப்பயணம் முடித்து விட்டு சியோல் நகரம் திரும்புகிறார். நீண்ட நாள் பிரிந்த தன் மகளை அவள் பிறந்த தினமான அன்று காண மிக ஆர்வமாக உள்ளார். ஆனால் மகளோ தன் தந்தையை நீண்டநாள் பார்க்காத கோபத்தில் உள்ளார். சரியாக மகளை பார்க்க போகும் அந்த நேரத்தில் சரியாக 12 மணிக்கு ஒரு விபத்தில் மகள் பலியாகிறார். அதிர்ச்சியில் உறைந்த தந்தை செய்வதறியாது நிற்கிறார். மணி சரியாக பன்னிரண்டு முப்பது ஆகிறது. திடீரென பார்த்தால் மீண்டும் விமானத்தில் காலை 10.30 மணிக்கு இருக்கிறார். அவரது கண்டதெல்லாம் ஒரு கனவுபோல இருக்கிறது ஆனால் மீண்டும் அதேபோல் நிகழ்கிறது.

விமானம் தரையிறங்கும் நேரம் கால 10.30 மணி இருந்து மதியம் 12.30 மணி வரை அவர் வாழ்க்கையில் அந்த இரண்டு மணி நேரங்கள் தொடர்ந்து திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருக்கிறது. அப்போதுதான் தான் ஒரு நேர வளையத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றோம், தன் மகளை காப்பாற்ற இயற்கை தனக்கு நல்ல அரிய வாய்ப்பை அளித்துள்ளது என்பதை அவர் உணர்கிறார். ஆனால் எவ்வளவோ முயன்றும் அவரால் தன் மகளை காப்பாற்ற முடியவில்லை.

அதேபோல இன்னொருவர் தன் மனைவியை அதே விபத்தில் இழக்கிறார். அவரும் அதேபோல நேரம் வளையத்துக்குள் சிக்கி மீண்டும் மீண்டும் தன் மனைவியை காப்பாற்ற முயற்சி செய்கிறார் ஆனால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் இந்த இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவரும் சேர்ந்தே தத்தம் மகளையும் மனைவியையும் காப்பாற்ற திட்டமிடுகிறார்கள். அப்படியும் முடியவில்லை.

பிறகுதான் தெரிகிறது அது ஒரு விபத்தல்ல கொலை என்று. இன்னொருவர் வாழ்விலும் அதேபோல அந்த குறிப்பிட்ட காலம் மீண்டும் மீண்டும் தொடர்கிறது ஆனால் அவர் அந்த இருவரையும் ஒவ்வொரு முறையும் கொலை செய்கிறார். அந்த இருவரையும் கொலை செய்வதோடு மட்டுமல்லாமல் தானும் இறக்கின்றார்.

“வந்தான் கொன்னான் செத்தான் repeat”
“வந்தான் கொன்னான் செத்தான் repeat”
“வந்தான் கொன்னான் செத்தான் repeat”.

இப்படியே மீண்டும் மீண்டும் நடக்குது. ஒரு கட்டத்தில் அந்த கொலைகாரனை கொன்று விடுவோம் என்று எண்ணுகிறான் அந்த பெண்ணின் கணவன். ஆனால் மகள், மனைவி மற்றும் அந்த கொலைகாரன் இந்த மூவரில் யார் ஒருவர் இறந்தாலும் மீண்டும் காலம் repeat modeக்கு போய் நேர வளையத்திற்குள் சிக்கிக் கொள்ளும் என்பதுதான் “இயற்கையின் நியதி”.

ஆக இவர்களுக்கு இருக்கும் ஒரே வழி அந்த கொலைகாரனின் மனம் மாற வேண்டும், அவனா பார்த்து மன்னித்தால் மட்டுமே இந்த பிரச்சனை நீங்கும். இப்படி நடப்பதற்கு என்ன காரணம் என்று யோசிக்கையில் மருத்துவர், அந்த கணவர் மற்றும் அந்த கொலைகாரன் இந்த மூவருக்கும் இடையில் ஒரு பிணக்கு உள்ளது, அதை சரிசெய்துகொள்ள காலம் ஒரு நல்ல வாய்ப்பை அந்த மூவருக்கும் வழங்கியுள்ளது என்பதை கண்டறிந்து கொள்கிறார்கள்.மூவருக்கும் இடையே உள்ள அந்த பிணக்கு தீர்க்கப்பட்டதா? மூவரும் சாகாமல் காப்பாற்றப்பட்டார்களா? என்பதுதான் மீதிக்கதை.

ரொம்பவே வித்தியாசமான, புதுமையான கதைக்களம்.அதை படு சுவாரஸ்யமாக நம்மை ஆச்சர்யத்தில் அசர வைக்கும் அளவிற்கு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். Out of the box thinking என்ற ஒரு ஆங்கில சொல்லாடல் உண்டு. அதற்கு இந்த படத்தை உவமையாக சொல்லலாம். படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை அப்படி ஒரு பரபரப்பு. படம் முடியும் வரை இருக்கை நுனியிலேயே நம்மை வைத்து இருக்கக்கூடிய அட்டகாசமான திரைக்கதை மற்றும் கத்தரிப்பு பணி. கத்தரிப்பு பணி மிக சவாலான ஒரு படம் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி காட்சிகள் வரும் இந்த திரைக்கதையில் கத்தரிப்பு பணி மகத்தானது. கனகச்சிதமாக சிறப்பாக நமக்கு சலிப்பு ஏற்படாதவாறு கத்தரிப்பு பணி செய்யப்பட்டுள்ளது.

நடித்த நடிகர்கள் அனைவருமே சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். மிகப் புதுமையான திரைக்கதை மிக சுவாரசியமான ஒரு படம் என்பதை எல்லாம் தாண்டி இந்த படம் மிக உலக சினிமாவில் முக்கியமான ஒரு படம் என்று நான் சொல்ல காரணம் இந்த படம் பேசும் “மனிதம்”தான்.

மன்னிப்பும், பிராயச்சித்தமும் மனித வாழ்க்கையில் மிக மிக இன்றியமையாத குணநலன்கள். தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறை செய்வோர்கள் அதற்கான பிராயச்சித்தத்தை அவர்கள் செய்தேயாக வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ யாரோ ஒருவர் செய்யும் தவறினால் பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்கும் உணர்வை விட்டு விட்டு அதை மன்னித்து கடந்து செல்லவேண்டும்.

இந்த அற்புதமான மனிதத்தை இப்படி ஒரு புதுமையான திரைக்கதையில் புகுத்தி உள்ளனர்.அதுதான் இந்த படத்தை அவசியம் காணவேண்டிய ஒரு திரைப்படமாக மாற்றியுள்ளது.

கண்டிப்பாக ஒரு நாள் செலவு செய்து இந்த “ஒரு நாளை” (A day) காணலாம்.

பின் குறிப்பு:

இந்த time loop (நேர வளையம்) யுக்தியை பயன்படுத்தி தமிழில் முதன்முறையாக வெங்கட் பிரபுவின் மாநாடு படம் தீபாவளிக்கு வருகிறது. A day அளவுக்கு சிறப்பான ஒரு படமாக இருந்தால், தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு நல்ல படமாக அமையும். தொடர்ந்து அரைச்ச மாவையே அரைத்து கொண்டு இருக்கும் தமிழ் சினிமாவிற்கு இந்த அரைச்ச மாவையே அரைக்கும் (time loop) திரைக்கதை யுக்தி கைகொடுக்கிறதா என பார்ப்போம்.


மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply