Home>>செய்திகள்>>கரிகாலன் கட்டுமானம் நிறுவனர் திரு. அமர்நாத்துடன் ஒரு உரையாடல்
அமர்நாத் - கரிகாலன் கட்டுமானம்
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவணிகம்

கரிகாலன் கட்டுமானம் நிறுவனர் திரு. அமர்நாத்துடன் ஒரு உரையாடல்

மிகவும் சவால் நிறைந்த துறைகளில் ஒன்றான கட்டுமான துறையில் மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி பகுதிகளில் சிறப்பான இயங்கிவரும் மன்னார்குடியை சார்ந்த கரிகாலன் கட்டுமான நிறுவனத்தின் தலைமை பொறியாளர் மற்றும் அதன் நிறுவனர் திரு. அமர்நாத்துடன் நடைப்பெற்ற உரையாடலை தங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம்.

1. தங்கள் படிப்பை பற்றி கூறுங்கள் அமர்?

திருச்சியில் இருக்கிற பிரபலமான ஒரு கல்லூரியில் கட்டுமானத்துறை சார்ந்த இளநிலை பொறியியல் படிப்பு. முதல் வரிசையில் இருந்த மாணவன் இல்லை, எனக்கு பிடித்த கடைசி வரிசையில் தான் அமர்ந்து இருந்தேன்.

எல்லா சேட்டையும் உண்டு, கல்லூரி அறிவிப்பு பலகையில் அதிகம் மதிப்பெண்கள் தரவரிசை பட்டியலிலும் என் பெயர் இருக்கும், அப்படியே தவறு செய்தவர்கள் பெயர்களை வெளியிடும் பட்டியலிலும் என் பெயர் இருக்கும்.

2. தங்கள் துவக்க நிலை வேலை வாய்ப்புகள் பற்றி?

கல்லூரி முடித்த உடனே வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. அதே நேரம் வேலை கிடைக்கவில்லை என்றால் என்னவாகும் என்ற பயமும் மனதிற்குள் ஓடியது.

கல்லூரி முடித்துவிட்டு ஒரு வாரத்தில் தஞ்சாவூரை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்தில் Site Engineerஆக சேர்ந்துவிட்டேன். மாதம் ரூ.2500/- சனிகிழமைல 400 ரூபாய் பெட்ரோலுக்காக.

3. இந்த தொழில் துவங்கிய ஆண்டு?

தொழில் துவங்கிய ஆண்டு 2018 முதல் மாத கடைசியில். முதல் கட்டிட பணிக்கான பேச்சுவார்த்தையை 2017 மே மாதத்தில் துவங்கினேன். ஒரு கட்டிடம் கூட கட்டாத, அனுபவம் இல்லாத பொறியாளர் என்பதால் கிட்ட தட்ட 8 மாதங்கள் ஆனது அந்த பணியை பெற.

தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு முதல் கட்டிடம் கட்டுவதாக பேசிய சூழலில் அந்த பணியை துவங்க இயலாமல் போனது. இருப்பினும் அவரே அவரின் பெரியப்பா மகன் ராசியங்காடு பகுதியை சேர்ந்த இராமகிருஷ்ணன் அவர்களிடம் அறிமுகம் செய்து எனக்கு வேறொரு வாய்ப்பை பெற்று தந்தார்.

இந்த வாய்ப்பை அளித்தவருக்கு மற்றும் அறிமுகம் செய்த இருவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். காரணம் அதுவே என் முதற்படி என்பேன்.

4. இந்த தொழில் துவங்க உங்களுக்கு எது உந்துதலாக இருந்தது?

என்னுடைய ஆசிரியர் ஒருவர். படிச்ச படிப்ப சொல்லி கொடுக்கனும் இல்லையென்றால், அது சார்ந்த வேலைய பார்க்க வேண்டும் என்று எப்போதோ கூறியது என் மனதிற்குள் அப்படியே தங்கிவிட்டது என்பேன். அதையும் தாண்டி நமக்காக நாம உழைக்கனும்ங்குற எண்ணமும் அழுத்தமா மனசுல இருந்துச்சு.

5. கட்டுமான தொழிலில் எதிர்கொண்ட மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

எதிர்கொண்ட சவால்கள் என்னவென்றால் நான் எவ்வளவு நேர்த்தியாக வரைபடம் கொடுத்தாலும், சின்னபையன் நன்றாக வரைவான் ஆனால் அனுபவம் இருக்காதுனு என்று சொல்லிருவாங்க.

சில விடயங்களை இந்த மதிப்பிடுல நினைத்துக்கூட பார்க்க முடியாதுனு நல்லாவே தெரியும், அதை செய்ய சொல்லுவாங்க. அது செய்ய எவ்ளோ ஆகும் என்று என்னிடம் கேட்காமலேயே எவ்வளவு தொகையில் செய் என்று சம்பந்தமே இல்லாம ஒரு தொகைய சொல்லுவாங்க. ஆனா அந்த தொகைல செய்யுறேன், அதை விட அதிகமான வேலைகளை சொல்லிகிட்டு 100 போலி நபர்கள் நிற்பார்கள்.

6. தரமான கட்டிடங்களை கட்டும் பொழுது எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?

நிச்சயமாக நான் ஒரு பொறியாளனா இல்லாமல் போயிருந்தாலும், கண்டிப்பாக ஒரு பொறியாளரை தேர்ந்தெடுக்குறது தான் முதல் பணியாக சொல்லிருப்பேன்.

முன்பெல்லாம் பொறியாளர் இல்லாமல் கட்டவில்லையானு கேள்வி வந்தா நினைவில் கொள்ளுங்க, பொருளின் தரத்துல ஆரம்பிச்சி காலநிலை வரை பெரிய மாற்றத்தையும், சீர்கேடையும் அடைஞ்சிருக்கு. இதை முடிச்சாலே 75-80% வேலை முடிஞ்சிரும்.

அதுக்கப்பறம் கட்டுமானப்பொருட்கள பற்றி யோசிக்கலாம். நிறைய மூடநம்பிக்கை கட்டுமானத்துறைல கொட்டிக்கெடக்கு. அதில் இருந்து வெளில வந்தோம்னா நிச்சயமாக நல்ல தரத்துல, எதிர்பார்க்காத அளவுல ஒரு தனித்துவமான கட்டிடங்களை கட்டலாம்.

7. சிறிய குடும்பத்திற்கு ஏற்ப 1000 சதுர அடியில் வீடுகட்ட எவ்வளவு தொகை செலவிடலாம்?

சிறிய குடும்பங்களுக்கு இரண்டு படுக்கையறையுடன் கூடிய விட்டினை 750 சதுர அடியில் உருவாக்க முடியும் அண்ணா.

2 படுக்கை அறை, ஒரு குளியல் அறை, கூடம், சமையல் அறை, கட்டிடத்திற்கு வெளிப்புறம் இவற்றை 15,00,000 உருவாக்க முடியும். ஒரு வருடத்திற்கு. முன்பு 13.50 – 14 லட்சத்திற்கு செய்து கொடுத்துக் கொண்டு இருந்தோம்.

8. உங்கள் நிறுவனத்தின் இலக்கு என்ன?

பொதுவான இலக்கு – தொடர்பு கொண்டவங்களுக்கு அவங்களோட நிதிநிலைக்கு ஏற்ப கண்டிப்பாக ஒரு வீடு கிடைப்பதை உறுதி செய்வது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் நம்ம கிளை வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். அதுக்கான அடித்தளமாக தான் காவிரிப்படுகை பகுதியில் கட்டுமான பணிகளை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். தரமான கட்டிடங்களை கட்டி விற்பதும் அடுத்த ஆண்டிற்கான இலக்காக உள்ளது.

நகர குடியிருப்பை உருவாக்க வேண்டும், பணக்காரங்களுக்காக இல்லாம நடுத்தர ஏழைகளுக்கானதாக. சோழன் Townshipக்கு வந்தால் 15 முதல் 20 லட்சங்கள்ல ஆரம்பிச்சி தரமான இடத்துடன் கூடிய வீடு இருக்கும்ன்னு. முறையான நீர் மேலாண்மை வசதி உடன் தெளிவான நகரமாக அது இருக்க வேண்டும். எல்லா நகர பெருநகரங்களில் இருந்து சில கி.மீ. தூரத்துக்குள்ள இருக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.

9. உள்ளூர் இளையோர்கள் ஏன் தொழில் துவங்க வேண்டும்?

தனிமனித வளர்ச்சியே ஒரு சமூகத்தின் வளர்ச்சியாக இருக்க முடியும். நமக்கு என்ன கிடைக்க போகிறது என்பதை தாண்டி சுற்றியுள்ளவர்களுக்கும் முடிந்ததை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பல இளையோர்கள் தொழில் துவங்கி வருகிறார்கள், அது மேலும் அதிகரிக்க வேண்டும் என்பேன்.

பெரும்பாலோனோர் “தொழிற்கல்வியை படிச்சிட்டு வேலைக்கு போ என்று தானே நம் சமூகத்தில் சொல்லி வருகிறார்கள்” அந்த நிலை மாற வேண்டும். தொழில் கல்வி படிப்பவர்கள் தொழில் துவங்க வேண்டும் என்ற சிந்தனையை நாம் தொடர்ந்து விதைக்க வேண்டும்.

10. எந்த மாதிரியான கட்டுமான பணிகளை நீங்கள் கையாள்கிறீர்கள்?

தற்பொழுது வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் நிதிநிலைக்கு ஏற்ப தரமான கட்டிடங்களை கட்டி தருகிறோம். மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி போன்ற பகுதிகளில் கட்டி தருகிறோம். விரைவில் இந்த வட்டமும் விரிவடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

11. உங்களின் எதிர்கால இலக்கை பற்றி கூறுங்கள்?

அனைத்துவிதமான வீடுகளும், வணிக வளாகங்களை, வாடிக்கையாளர்கள் எண்ணத்தில் இருக்கும் வடிவமைப்பை நாங்கள் நிலத்தில் கொண்டு வர வேண்டும் என்பதே. அதுனால தான் எங்கள் நிறுவனத்தின் அடிப்படை கருவாக “Concept to Creation” என்ற வார்த்தையை பயன்படுத்திருப்போம்.

மற்றும் நாங்களே மக்களின் தேவைகள், நிதிநிலைகளை ஆராய்ந்து தரமான வீடுகளை கட்டி, பின்னர் மக்களிடம் விற்க வேண்டும் என்பது தான் அது. அதன் தொடர்ச்சியாக நகர கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நீண்ட நெடிய தொலைநோக்கு பார்வையுடன் இயங்குகிறோம். அதற்கு எதிர்காலத்தில் காலம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

12. இறுதியாக கரிகாலன் கட்டுமானம் (Karikalan Foundation) என்று ஏன் இந்த பெயரை வைத்தீர்கள்?

கரிகாலச்சோழன் அந்த பெயரில் பெரிய தெம்பும், உந்துதலும் இருக்கு. இருக்கிற கட்டமைப்புகளை பாதுகாக்குறதும், பெரிதாக்குவதும் எளிது. ஆனால் அதை உருவாக்குவது அவ்வளவு எளிதான விடயம் அல்ல.

அதை செய்வதற்கு தான் “கரிகாலன்” என்ற பெயரை தேர்வு செய்தேன். ஒரு வரலாறு மொத்தமும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கு. எனக்கு தெரிந்தவரை ராசகுரு என்ற ஒரு ஆள் இல்லாத அமைச்சரவை கரிகாலனோடது. அதனாலேயே அவரின் வரலாறு அடுத்தடுத்த தலைமுறையில் பேர் இல்லாம போய்விட்டது.

என் பார்வையில் காவிரிக்கரையில் வாழ்ந்த, வாழ்கிற, உழவர் குடி, பிற தொழில் செய்பவர்களும் சாதி, மதம் கடந்து குலதெய்வமாக கொண்டாட வேண்டியவர் “கரிகாலன்” தான்.

பிற்கால சோழர்களே பலர் உலகமே வியக்கும் வகையில், கோயில் கட்ட வேண்டுமே என்று நினைத்து பொருள் அளவு செய்த பொழுது, மூடநம்பிக்கைகள் எல்லாம் உருவான முற்காலச்சோழன் ஒருத்தன், கோவிலில் செலவு செய்வதை விட தன் மக்களுக்காக செலவு செய்ய நினைத்து கல்லணைய கட்டியிருக்கிறார். அவர் எவ்வளவு பெரிய கம்யூனிச சித்தாந்தம் உடையவராக இருத்திருக்க முடியும் என்று யோசித்து பாருங்கள்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், அதுவே அவரின் எண்ணமாக இருந்து இருக்கிறது. அவரை தலைவனாக, தெய்வமாக ஏத்துகிட்ட எங்களுக்கும் அதுவே எண்ணம்.

சில தரவுகள் அடிப்படையில பார்த்தால் அவர் சிறுதெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடையவர் செய்தியும் கிடைக்க பெற்றோம்.

எல்லாத்துக்கும் மேல அவரும் ஒரு கட்டுமான பொறியாளர் தான்.

நீண்ட நேரம் நாம் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சோர்வடையாமல் திறவுகோல் இணையத்திற்கு பதில் அளித்த கரிகாலன் கட்டுமான நிறுவன உரிமையாளர் திரு. அமர்நாத் அவர்களுக்கு எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்துடன் அவர்களின் பணிகள் தொடர்பான படங்களை கீழே பகிர்ந்துள்ளோம்.

 

அவர்களின் தொடர்பு விவரங்கள்:
Karikalan Foundation
+91 78680 89548

நன்றி.


கி. மாணிக்கம்,
மன்னார்குடி.

Leave a Reply