Home>>கட்டுரைகள்>>நாம் தொலைத்த தோழர் முகிலன்
கட்டுரைகள்

நாம் தொலைத்த தோழர் முகிலன்

எங்கே முகிலன்? எங்கே முகிலன்? என்ற முழக்கங்கள் ஒருபுறம் மெல்ல நம் செவிகளில் ஒலிக்க, யாருடா அந்த முகிலன், எதற்காக அவரைத் தேடுகிறார்கள், அவரவருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கையில் இவர்களுக்கு வேறு வேலையில்லை என்று கூறுபவர்கள் ஒருபுறம் இருக்க, எவன் செத்தால், பிழைத்தால் நமக்கென்ன, நம் குடும்பம் நம் குழந்தைகள் நலம் மட்டும் போதுமென்று சிலர் இருக்க, கற்பனை கதைகளில் கதாபாத்திரங்களாக வருபவர்களை கடவுளென நினைத்து அவர்களை சமூகப் போராளிகளென பாவித்து பாலாபிசேகங்கள் நிகழ்த்தும் கூட்டங்கள் ஒருபுறம் என பெரும்பாலும் தன்னலத்துடன் வாழும் மக்களுக்கிடையே தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இவற்றை எல்லாம் நாம், அறியாமை என்று கூறுவதா? இல்லை, ஒருவித மோகம், மக்களின் அலட்சிய நிலை என்று கூறுவதா?  எதுவாக இருப்பின் என்ன? நம்மில் ஒருவருக்கு கூட நம்முடன் வாழும் மற்ற மனிதர் மீது எந்த ஒரு அக்கறையும் கிடையாது. அனைவருமே தனது வலியினை ஏற்க மறுக்கின்றனர். ஆனால் சக மனிதருக்கு அதே வலியைக் கொடுப்பதில் துளியும் வருத்தமின்றி வாழ்கின்றனர். இவ்வளவு ஈனமான பிறவியா இந்த மனிதப் பிறவி என்று என்னும் அளவிற்கு! இவற்றையெல்லாம் நினைக்கையில் மிகவும் அருவருப்பாக உள்ளது மனிதனாய் வாழ்வதற்கு!

 

ஏன் இவ்வளவு கோபம்? எதற்காக மனிதனாய் வாழ்வதற்கு வருத்தப்படுகிறேன் என்று நினைத்தீர்களானால் தொடர்ந்து படியுங்கள்.

 

கடந்த பிப்ரவரி 15 ம் தேதி முகிலன் என்ற ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் காணாமல் போயிருக்கிறார். இது குறித்து ஒரு சிலர் தனது முகநூல் பக்கத்தில் இவரைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து வந்தனர். ஆனால் பலருக்கு இவர் யார் என்றே தெரியாது. நான் உட்பட. இவரை குறித்து பகிரப்பட்ட ஒரு சில செய்திகளும் இவர் காணவில்லை என்ற செய்தியும் மனிதாபிமான அடிப்படையில் இவர் யார் என்று தெரிந்துக் கொள்ள தூண்டியது. இவரைப் பற்றி தெரிந்துக் கொள்ள விரும்பி கூகுளில் இவரைப் பற்றி சில விடயங்களை தெரிந்துக் கொண்டேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இவரைப் பற்றி உடனடியாக ஒரு கட்டுரையை என் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தேன். நாம் அனைவரும் தான் மிகவும் நல்லவர்கள் அல்லவா! நமக்கு இழைக்கப்படும் அநீதியை பற்றி பக்கம் பக்கமாக பேசுவோம்.

ஆனால் அச்செய்தியை கடந்து சென்றோரே பலர். அதைப் படித்து புரிந்து வெகுசிலர் அவருக்காக தனது முழக்கங்களையும், ஆத்திரங்களையும் தங்களது சமூக வலைதளங்களில் தெரியப்படுத்தி இருந்தனர். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் சிலரும் அவர்களது ஆதரவைத் தோழர் முகிலனுக்காக தெரிவித்தனர். எனினும் நாம் அனைவரும் நமது வேலைகளில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறோமே தவிர இவரைப் பற்றி பேசுவதற்கு நமக்கு நேரமில்லை. அவரும் தன் குடும்பம், தன் குழந்தை, அரசு வேலையில் கை நிறைய சம்பம் என்று சந்தோஷமாக இருந்திருக்கலாமே? எதற்காக மக்களின் வாழ்வாதாரத்திற்காக போராட வேண்டும்? தன குடும்பத்தின் வாழ்வுதனை தவிக்கவிட வேண்டும்?

தோழர் முகிலன் ஈரோட்டின் அருகிலிருக்கும் சென்னிமலையைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். நம் மண்ணின் வளங்களைக் காப்பதற்காக, தான் பார்த்துக் கொண்டிருந்த அரசு வேலையைத் துறந்து முழு நேரம் மக்கள் சேவையில் ஈடுபட்டார். ஆற்றுப்படுகையில் அரசின் ஆதரவுடன் நடக்கும் மணல் கொள்ளையைத்  தட்டிக் கேட்டார். சாயப் பட்டறை கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலப்பதை எதிர்த்துப் போராடினார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை, கெயில் எரிவாயுத் திட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற சுற்றுச்சூழலுக்குக்  கேடு விளைவிக்கும் பல திட்டங்களை எதிர்த்து போராடியவர் தோழர் முகிலன்.  

 

இதுபோன்ற போராட்டங்களை நாம் திரையில் திரைப்படமாகவே கண்டு பழகி விட்டோமல்லவா? அதனால் தான் என்னவோ இந்த நிஜத்தினை மனம் ஏற்க மறுக்கிறது. இவரும் திரைப்படத்தில் நடிக்க மட்டும் செய்திருந்தால் இவரையும் தூக்கி வைத்துக் கொண்டாடி இருப்போம். இவருக்கென சில தற்கொலைகளும் அரங்கேறியிருக்கும். ஊர் போர்க்களமாகி எப்படியேனும் இவரை கண்டுபிடிக்க சில முயற்சிகளேனும் எடுக்கப்பட்டிருக்கும். தொலைக்காட்சிகளிலும் செய்திகளிலும் 24 மணி நேரமும் காரசார விவாதங்கள் நடந்திருக்கும். படங்களை படமென பாராமல் மோகத்தில் ஊறி கோவிலும், ரசிகர் மன்றங்களும் கட்டிப் பாழாகும் சிலர், படத்தினை நிஜமென நம்பி நாட்டை ஆள அனுமதிக்கும் சிலர். இதை எடுத்துக் கூறினால் நம்மை முட்டாளென கூறும் நாடு. இதில் எங்கிருந்து வரும் நல்லாட்சி? நல்ல மக்கள் வாழும் இடத்திலேயே நல்ல ஆட்சி உருவாகும் வாய்ப்பு அதிகம். 

ஆனால் இவரோ துளியும் நன்றியே இல்லாத நம்மை போன்ற மனிதர்களுக்காக போராடி ஆபத்தில் சிக்கிக் கொண்டார். இன்று இவரை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் கடந்து செல்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 13 பேர் கொல்லப்பட்டபோது பொங்கி எழுந்த பலர் இன்று வாய்மூடி நிற்பது ஏனோ? இதுகுறித்த ஆதாரங்களை வெளியிட்டு செல்லும்போது தான் தோழர் முகிலன் தொலைந்துப்  போனார். இவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து எனில் நம்மில் ஒவ்வொருவரும் தான் பொறுப்பு. நாம் இன்றும் சாதி மதம் என்று சண்டையிட்டுக்  கொண்டிருக்கிறோம். ஆனால் ஆங்கிலேயரைக் காட்டிலும் ஆபத்தான நம் அரசியல்வாதிகள் பெருநிறுவனங்களுக்கு நம் மண்ணின் வளத்தையும் மக்களின் வளர்ச்சியையும் கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர். நாமும் கை கட்டி வாய்பொத்தி பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் யார் மீதும் குறைகூற நமக்குத் துளியும் தகுதியில்லை. காசுக்கு ஓட்டை விற்றோமல்லவா? “உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தானே ஆகவேண்டும்?!”

 

மக்களுக்கென வாழும் நல்லோரை 

கல்லெனக் கூட மதியதோர் 

திரை மோகத்தில் மூழ்கி அதுவே 

நிஜமென நம்பும் இளையோர் 

தட்டிக் கேட்க நினைக்கும் பெண்களை 

தலையில் கொட்டி வீட்டில் முடக்கும் சமூகம், 

காசுக் கொடுத்தால் போதும், ஓட்டையும் 

நாங்கள் விற்போம் எங்கள் நாட்டையும் 

எழுதிக் கொடுப்போம் என்ற மக்கள். 

தன் மக்கள் தன் மனைவி தன் குடும்ப 

நலன் மட்டும் கருதி வாழும் தன்னலவாதிகள், 

தேர்தல் சமயங்களில் காலிலும் விழும் ஆட்சியாளர்கள், இதில் நல்லாட்சி என்றொன்று எப்படி அமையும்?! 

 

தோழர் முகிலன் நலமுடன் திரும்ப அனைவரும் பிரார்த்திப்போம். அவரைப் பற்றிய செய்திகளை அதிகம் பகிர்ந்து அனைவரும் அறிய செய்வோம். மனிதர்களாய் வாழ்வோம்! மனிதநேயத்துடன் வாழ்வோம்!

மகாலெட்சுமி, மன்னார்குடி.

(2050 பங்குனி மாத மின்னிதழிலிருந்து)

 

Leave a Reply