Home>>இந்தியா>>கோலார் தங்கவயலில் தமிழ் எழுத்துக்களை அழித்த “வக்கிரன்” வாட்டாள் நாகராசுக்கு கடும் கண்டனம்.
இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

கோலார் தங்கவயலில் தமிழ் எழுத்துக்களை அழித்த “வக்கிரன்” வாட்டாள் நாகராசுக்கு கடும் கண்டனம்.

பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டு. கோலார் தங்கவயலில் தமிழ் எழுத்துக்களை அழித்த “வக்கிரன்” வாட்டாள் நாகராசுக்கு கடும் கண்டனம் என்று தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ. கௌதமன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதன் விவரத்தை கீழே பகிர்ந்துள்ளோம்.


கர்நாடகாவில் உள்ள கோலார் மாவட்டம் தங்கவயல் பகுதியில் கன்னட ரக்சன வேதிகே அமைப்பைச் சார்ந்த வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட காட்டுமிராண்டிகள் காவல்துறையினரின் ஆதரவோடு அங்கிருந்த தமிழ் எழுத்துக்களைத் ‘தார்’ பூசி அழித்திருக்கிறார்கள். நீண்ட நெடுங்காலமாக தமிழர்களைத் தாக்கியும், தமிழர்களின் சொத்துக்களைச் சூறையாடியும், வஞ்சத்தோடு தமிழ் மொழியைச் சிதைத்துக்கொண்டும் இருக்கிற வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட மிருகக் கூட்டங்களுக்கும், இதனைக் கட்டுப்படுத்தாது தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்திய ஒன்றிய அரசு, கர்நாடக, தமிழ்நாடு அரசுகளுக்கும், தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு விடுதலை பெற்று எழுபது ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ்நாட்டில் தமிழர்களோடு கன்னடர்களும், கர்நாடகாவில் கன்னடர்களோடு தமிழர்களும் ஒரு தாய் வயிற்று உடன்பிறப்புகளாகப் பழகி வாழ்ந்து வருகிறோம். ஆனால் இடையில் தங்களது சுயநல அரசியல் லாபத்திற்காக வாட்டாள் நாகராஜ் போன்ற மனிதத்தன்மையற்ற மிருகங்களால் கர்நாடக தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். 1993இல் நடந்த காவிரி கலவரத்தில் நூற்றுக்கணக்கான எங்கள் தமிழர்கள் பதைக்கப் பதைக்க வெட்டி நடுவீதியில் வீசப்பட்டார்கள். எங்கள் வீட்டுப் பிஞ்சுப் பிள்ளைகள் தரையில் அடித்து, சாக்கடையில் வீசப்பட்டார்கள்.

தமிழர்களின் வீடுகளும், சொத்துக்களும் எரிக்கப்பட்டன. ஆனாலும் அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்நாட்டிலுள்ள ஒரு கர்நாடகத்தினரையோ அல்லது அவர்களது நிறுவனங்களையோ நாங்கள் தாக்கியதில்லை. மாறாக பேரன்பு காட்டி மனிதநேயம் உள்ளவர்களாக இன்றும் கூடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் வாட்டாள் நாகராஜ் கூட்டம் எங்கள் பொறுமையைச் சோதித்துக் கொண்டே இருக்கிறது. கர்நாடக மண்ணில் மட்டுமே ஆட்டம் போட்ட இந்த கெட்ட மிருகங்கள் அத்துமீறி தமிழ்நாட்டிற்குள்ளும் புகுந்து இது எங்கள் கர்நாடகப் பகுதி என கொடியோடு வந்து கொட்டமடிக்கிறது. இந்த கூத்தையெல்லாம் இனியும் தமிழினம் வேடிக்கை பார்க்காது. இந்திய விடுதலைக்கு போராடி அதிகம் செத்தவர்களும் தமிழர்கள். விடுதலைக்கு பிறகும் கூட்டம்கூட்டமாக செத்துக் கொண்டிருப்பவர்களும் தமிழர்களாகத்தான் இருக்க வேண்டும் என்கிற நிலை தொடர்ந்தால் யுத்தம் செய்தே பழக்கப்பட்ட தமிழினம் சில இறுதியான முடிவுகளை எடுக்க வேண்டி வரும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோலார் மாவட்டம் தங்கவயல் பகுதி, தமிழர்களால் உருவாக்கப்பட்ட, தமிழர்கள் மட்டுமே எண்பது விழுக்காடு வாழ்கின்ற பகுதி. மொழிவழி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது பொறுப்பற்ற சிலரால் அது தமிழர்களின் கையை விட்டுப்போனது என்பது வரலாற்று ஆய்வாளர்களுக்கு நன்கு தெரியும். இராஜராஜசோழன் கட்டிய கோலாரம்மன் கோயில் இன்றும் அங்கு நிலைகொண்டு நிற்கிறது. 1980-இல் தமிழ்மொழிக்காக போராடிய நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மதராஸ் மாகாணமாக இருந்தபோது அங்கு சிறிய அளவில் இருந்த கன்னடர்களும் தமிழ் மொழியைத்தான் படித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று தமிழர்களின் கடைகளில், நிறுவனங்களில் கூட தமிழ் இல்லை. மீறி இருந்தால் அது அழிக்கப்படுகிறது அல்லது அடித்து நொறுக்கப்படுகிறது.

ஓசூரில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தின் முகப்பில் தெலுங்கு மொழியும் அதற்குப்பின்னால் “தமிழ் வாழ்க” என்றும் எழுதப்பட்டிருக்கிறது. அரசு கட்டடத்தில் தமிழ் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாட்டிற்கு அவமானம். வேண்டுமானால் தேவைப்படும் இடத்தில் ஆங்கிலத்திற்கு பிறகு மூன்றாமிடத்தில் தெலுங்கோ, கன்னடமோ அல்லது வேறு மொழிகளோ இருப்பதில் எங்களுக்குக் கவலை இல்லை. உடனடியாக தமிழ்நாடு அரசு இதனைக் கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும்.

இலங்கையில் எப்படி ஈழத் தமிழர்களை ஓட ஓட விரட்டி அடித்துக் கொலை வெறியாட்டம் ஆடினார்களோ,
அதேபோன்ற நிலை கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இனியாவது இந்நிலைக்கு இந்திய ஒன்றிய அரசும், கர்நாடக, தமிழ்நாடு அரசுகளும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்காகவே தமிழ்நாடு முதல்வரும், கர்நாடக முதல்வரும் சந்தித்துப் பேசி ஒரு தீர்க்கமான முடிவை எட்ட வேண்டும். இல்லையேல் தமிழர்களின் உரிமையைக் காக்க தமிழர்கள்தான் போராட வேண்டுமென்றால், நாங்கள் ஏற்கனவே கணக்கெடுத்து வைத்திருக்கின்ற, தமிழ்நாட்டில் உள்ள கன்னடர்களின் நிறுவனங்களை ஒன்றுவிடாமல் முற்றுகையிட வேண்டிவரும் என்பதனைத் தவிர்க்க இயலாத கொந்தளிப்போடு தெரிவித்துக் கொள்வதோடு இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களும் அமைதியோடும், மகிழ்வோடும் வாழ உயிரையே கொடுக்கின்ற தமிழினத்தைத் தொடர்ந்து சீண்டினால் இனியும் அமைதியோடு இருக்க மாட்டோம் என்கிற யதார்த்த மனநிலையைச் சம்பந்தப்பட்ட காட்டுமிராண்டிக் கூட்டம் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று மீண்டும் எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.


வ. கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”
11.07.2021


செய்தி உதவி:
இராசசேகரன்,
மன்னார்குடி.

Leave a Reply