Home>>இந்தியா>>தமிழ்ப் பெயர்ப் புரட்சி – இங்கர்சால் நார்வே
இங்கர்சால் நார்வே
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

தமிழ்ப் பெயர்ப் புரட்சி – இங்கர்சால் நார்வே

இந்த உலகில் உள்ள அனைத்து மொழியினரும் தமிழை பேச வைக்க முடியும் அதற்கு நாம் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை ஆம் பெயரை தமிழில் வைத்தால் மட்டும் போதும். அவர்கள் தமிழ் பெயர் சொல்லி தான் அழைத்தாக வேண்டும். அப்படியாவது தமிழ் சொல் உலகம் முழுவதும் பரவட்டும்.

உலகெங்கும் தமிழர்கள் பயணித்தார்கள் என்பதனை ஐயா ஒரிசாபாலு எப்படிக் கண்டறிந்தார் என்றால் அந்த ஊர் பெயர்களில் இருக்கும் தமிழை வைத்து தான். வரலாற்றில் மன்னர்கள் தமிழர்களின் ஆட்சி எதுவரை இருந்தது என்பதனை மன்னர்களின் தமிழ் பெயர் வைத்து தான் இதுவரை அறிந்து இருக்கிறார்கள்.
பெயர் என்பது வெறும் சுய அடையாளம் மட்டுமல்ல அது நாளைய வரலாற்றின் முகவரி.

10 கோடி தமிழர்கள் இருக்கும் இடத்தில் 50 ஆயிரம் தமிழ் பெயர்கள் மட்டுமே இருக்கிறது என்பது உண்மையில் ஒரு பற்றாக்குறையே. அதிலும் பெயர்கள் மிகவும் பழமையாக நீளமாக இருக்கிறது. சுருக்கமான பெயர்களை சில லட்சம் உருவாக்கமுடியும். தமிழ் அத்தனை வலிமையானது.

அதற்கான சில பரிந்துரைகள் வாய்ப்பு உள்ளவர்கள் இதனை முன்னெடுக்கலாம்.

1. அரசு தமிழ் பெயர் சூட்டப்படும் குழந்தைகளுக்கு சலுகை வழங்க வேண்டும்.

2. நீளமான தமிழ் பெயர்களை சுருக்கி குறும் பெயர்களாக உருவாக்க வேண்டும்.

3. பிற பெயர்களில் இருந்து தமிழ் பெயரை மாற்ற விரும்புவோருக்கு, பெயர்மாற்றம் முறைமையை எளிமைப்படுத்த வேண்டும். பிற மொழிப் பெயர் மாற்றத்திற்கு இந்த சலுகை பொருந்த கூடாது. அதாவது சந்தோஷ் எனும் பெயரை மகிழன் என்று மாற்றிக்கொள்ள எளிமையான முறையையும் மகிழன் என்ற பெயரிலிருந்து சந்தோஷ் என்ற பெயரை மாற்றிக் கொள்ள கடுமையான முறையையும் அரசு உருவாக்க வேண்டும்.

4. இராசி நட்சத்திரம் போன்றவற்றிற்கு பொருந்தக்கூடிய தமிழ் பெயர் குடும்பம் உருவாக்கப்பட வேண்டும். பிறமொழி சொற்களை பரிந்துரைக்க கூடாது என்று சோதிடர்களுக்கு அரசு வேண்டுகோள் எச்சரிக்கை வைக்க வேண்டும். அதனையே சோதிடர்கள் பரிந்துரை செய்ய அறிவுறுத்த வேண்டும்.

5. பயன்பாட்டில் இல்லாத சங்க இலக்கிய சொற்களை பெயர் சொல்லாக மாற்ற வேண்டும்

6. பெயர்களின் வகைகள் அறிந்து அதன் வகைகளை முழுமைப்படுத்த வேண்டும் உதாரணமாக வேல் என்ற ஆயுதம் பெயரில் இருக்கிறது அவை போன்று அனைத்து ஆயுதத்தையும் பெயராக மாற்ற முயலவேண்டும்.

7. பூக்கள் மரங்கள் மிருகங்கள் பறவைகள் போன்ற பெயர்களையும் அதேபோல மனிதர் பெயர்களாக மாற்ற வேண்டும். சிங்கம் மயில் போன்ற பெயர்களை உதாரணமாகக் கூறலாம்.

8. கல்வெட்டு பெயர்களை தனித் தொகுப்பாக உருவாக்க வேண்டும்

9. இலக்கிய பெயர்கள் தனித் தொகுப்பாக உருவாக்க வேண்டும்

10. இஸ்லாமிய பெயர்களுக்கு பொருள் இணையான தமிழ் பெயர் உருவாக்கப்பட வேண்டும். கபீர்=பேரறிஞன், கமால்=திறத்தன், கரீம்=வள்ளல், காசிம்=பகிருநன்

11. கிறிஸ்தவ பெயர்களுக்கு பொருள் இணையான தமிழ் பெயர்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆல்பர்ட்=புகழேந்தி, ஆன்ட்ரு=உரவோன், எட்வர்டு=வள்ளியோன், எட்வின்=திருவன்பன், கிளாரா=ஒளியல், சாரா=இளவரசி, ஜோசப் = வளன், லீனா = இனியாள்

12. சங்க சொற்கள் ஆயிரக்கணக்கில் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது அதில் பல சொற்களை மிக சுலபமாக பெயரை மாற்றி விட முடியும் இந்த முயற்சியை சொல் அறிஞர்களை வைத்து சங்க இலக்கிய பெயர்கள் என்று பெரும் பட்டியல் உருவாக்கப்படவேண்டும்

13. ஒவ்வொரு கடவுளுக்கும் பல பெயர்கள் இருக்கிறது அதனை அனைத்தையும் கடவுள் பெயர்கள் இடம்பெறும் தொகுப்பாக பட்டியலாக உருவாக்க வேண்டும். அதனை மக்களுக்கு சூட்டும் உன் கடவுளுக்கு சூட்ட வேண்டும். உலகம் முழுவதும் தமிழகம் முதல் உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் கோயில்களின் தமிழ் கடவுள் பெயர்கள் சமஸ்கிரத மயமாக்கப்பட்டன. அவற்றை மீண்டும் தமிழ் பெயருக்கு மாற்ற அரசு வழிவகை செய்யவேண்டும்.

14. அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார்போல் பெயர்கள் உருவாக்க TAGGING பகுப்புகள் உருவாக்க வேண்டும். உதாரணத்திற்கு சிவன் பெயர், முருகன் பெயர், இடப்பெயர், மலர் பெயர் போன்று வகைப்படுத்துதல் வேண்டும்.

15. 473 தமிழ்ப்புலவர்கள் பெயர்களை குறும் பெயர்களாக உருவாக்க வேண்டும். [இம்மென்கீரனார் → இம்மென், கீரனார், கீரன்]

16. தமிழ் வரலாற்று மன்னர்கள் பெயர்களையும் பெயர்களாக உருவாக்க வேண்டும் மன்னர்கள் பெயர் வரிசையில் புனைபெயர்கள் புகழ் பெயர்கள் அனைத்தையும் இணைக்க வேண்டும். [கடலன் வழுதி → கடலன், வழுதி]

17. உலகப் பெயர்களை ஒத்து இருக்கும் தமிழ்பெயர்களை தனி பட்டியலாக உருவாக்கவேண்டும் உதாரணத்திற்கு ALLEN என்னும் ஆங்கில பெயர் ஆழன் என்ற தமிழ் பெயர் இணையாக இருக்கிறது இதைப்போன்று ஆயிரம் ஆயிரம் பெயர்கள் இருக்கிறது.

18. திரைப்படம், தொலைக்காட்சி நாடகம் அனைத்திலும் பெயர் தமிழில்தான் இருக்க வேண்டும் என்று அரசாணை இடவேண்டும்.

19. தமிழில் பெயர் வைப்பது பெருமை என்ற குறு விளம்பரங்கள் அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்ப வேண்டும்.

20. அழகிய பொருள் உடைய சொற்களை கூட பெயர்களாக உருவாக்கலாம். அணல், அகன், அகிலன், அசர், அசன், அஞர், அஞன், அடலி, அடவி, அணரி, அணர்

இதில் மேலும் கருத்துக்கள் இருந்தால் பின்னூட்டமிடவும் அதனையும் இதில் சேர்த்து விடலாம்
தமிழகத்தில் தமிழ் பெயர் புரட்சி உருவாக வேண்டும் உலகில் தமிழன் எங்கு இருந்தாலும் அவன் தமிழன் என்பதை பெயர் வழியில் உலகறிய செய்ய வேண்டும்.


தமிழன் திரு இங்கர்சால் நார்வே
வள்ளுவர் வள்ளலார் வட்டம்,
நார்வே.
#PROJECTTAMILNAMES

Leave a Reply