இங்க எல்லாருக்கும் இரண்டு பாட்டி, இரண்டு தாத்தா இருப்பாங்க. ஒருத்தவங்க கூடவே இருப்போம், இன்னொருத்தர போய் தான் பார்ப்போம், அது
அம்மாயி பாட்டன்.
அம்மாயி தான் நாம பிறக்கும் போது இன்னொரு அம்மாவா இருக்குற ஆளு. இன்றைக்கு நிறைய குழந்தைகளுக்கு அம்மாயின் பாசம் கிடைப்பதில்லை. இங்கு நான் இழந்த அம்மாயி பத்தி தான் சொல்ல போறேன்.
அம்மாயி! நான் மறந்து போகல,
ஆனா நித்தம் உன்ன நினைக்கல. ஆனா, நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் விடுவேன் அம்மாயி.
நான்அம்மாவுக்கு இரண்டாவது மகனா பிறந்தேன். அண்ணனுக்கு வயசு ஒன்றரை பிறந்ததும் என்னை ஏந்தியபடி மறு அன்னை ஆனாய்.
எனக்கு என்னவெல்லாம் பணிவிடை செய்தாய் என்று நினைவு கூறும் வயதில்லை அப்போது.
எனக்கு நினைவு தெரிந்து கோடை விடுமுறை என்றால் எங்கள் மூன்று பேரின் புத்தக பை துணி வைக்கும் பையாக மாறி போகும். எப்போது கோடை விடுமுறை என காத்திருப்போம் உன்னை காண்பதற்கே!
என் தாய் பிறந்த வீட்டுல செல்வங்கள் நிறைய இல்லை. எங்க அம்மாயியின் பாசம் தான் நிறைந்திருந்தது. மூன்று மகன்களை திருமணம் செய்து வைத்தும் தனியே தான் சமைத்து சாப்பிட்டாய். யாரையும் சத்தமாக கூட பேசியதில்லை. என் அப்பா வந்தால் முடியாத வயதிலும் எழுந்து நிற்பாய்.
நாங்கள் வந்து விட்டால் உனக்கு மகிழ்ச்சியும் வரும், துக்கமும் வரும். மகிழ்ச்சி நாங்கள் வருவதால் இருக்கும், துக்கம் மூனு பேருக்கு நல்லதா வாங்கி சமைச்சு போட முடியலையே னு இருக்கும். அந்த வருத்தத உன் கண்ணுல பாத்திருக்கேன். எழுபது வயசுலயும் அம்மியில அரைச்சு கொடகல்லுல மாவாட்டி நீ செய்யுற சமையல் என் அம்மாவுக்கு கூட வராது. உனக்கு நிகரா சமைக்க யாருமே இப்போ இல்ல அம்மாயி!
உனக்கு பசி இருந்தும் எனக்காக நிறைய வச்சிட்டு கொஞ்சமா சாப்டுவ இல்லனா புடிக்காதுனு சொல்லுவியே அம்மாயி.
எனக்கு பிடிச்ச சாப்பாடுனா, அத நீ சாப்பிடாம வச்சிருந்து மறுநாளும் போடுவியே, அந்த அன்பு இனி அங்க யார்கிட்ட இருக்கும் அம்மாயி!
ஊர் திருவிழாக்கு வர சொல்லுவியே அம்மாயி, இப்போ யாரும் கூப்டுறதே இல்ல அம்மாயி. கூப்பிட்டாலும் நீ இல்லாத திருவிழா வெறுமை அம்மாயி!
முடி வெட்டி வந்தா, குளிக்காம உள்ள விடமாட்ட. என் தலைக்கு எண்ணெய் தேய்ச்சு விட்டுருக்க, எண்ணெய் தேய்த்து குளிக்க வச்சிருக்க, என் அம்மா செய்யுற எல்லாமே எனக்கு செஞ்சியே அம்மாயி!
நீ ஆசைப்பட்டு எதையும் கேட்டதில்லை,
உன்ன சரியா கவனிக்க கூட யாரும் இல்லையே அம்மாயி!
என் அம்மா வந்து உனக்கு பணிவிடை பண்ற பாக்கியத்தை கூட கொடுக்கலையே அம்மாயி!
ஆட்டு கொட்டகை பெருக்கி கடைசி வரைக்கும் நோய்னு படுக்கையில் படுக்காம அப்டியே போய்ட்டா என் அம்மாயி!
உன் கூட இருந்து உனக்கு ஒரு ஒத்தாசை பண்ணதுல எனக்கு சின்ன மகிழ்ச்சி.
ஆனா, நான் உனக்கு எதுவுமே வாங்கி தர முடியல அம்மாயி,
அத நினைக்கும் போது என் கண்கள் ஆறாக பெருகுது அம்மாயி!
அந்த துக்கத்தை எங்க போயி தீர்ப்பேனோ தெரியாது அம்மாயி!
எனக்கு உன்கூட இருந்ததெல்லாம் சொல்லி உன் கிட்ட அழனும் போல இருக்கு அம்மாயி! ஆனா அது நடக்க வாய்ப்பில்லையே அம்மாயி!
நீ இல்லாத அந்த வீடு கூட கூட இப்போ இல்ல அம்மாயி!
உன் நினைவா உன் புடைவை தான் இருக்கு அம்மாயி!
நீ நடுப்புள்ளனு கூப்டுறது இன்னும் எனக்கு கேட்டுகிட்டே இருக்கு அம்மாயி!
ஆத்தா ஆத்தா னு தான் உன்ன கூப்டுருக்கேன் அம்மாயி!
என் அப்பாயிய கூட கிழவினு சொல்லிருக்கேன், ஒரு தடவ கூட எங்கேயும் வாய்தவறி உன்ன சொன்னதில்லை அம்மாயி!
நான் சம்பாரிக்குறதுக்கு முன்னாடியே போய்ட்டியே அம்மாயி!
பல நாள் உன் புடவைய போத்திக்கிட்டு
தூங்கிருக்கேன் அம்மாயி!
உனக்கு நான் சம்பாரிச்சு ஒரு சேலை வாங்கி தரனும்னு ஆசைப்பட்டேன் அது கூட எனக்கு குடுத்து வைக்கல அம்மாயி!
நீ இறந்ததுல இருந்து என் கனவுல வரல ஆனா இப்போ வந்தியே அம்மாயி உனக்கு என்ன ஆசனு கனவுல கூட சொல்லலேயே அம்மாயி
ஏன் வந்தனு எனக்கும் புரியல அம்மாயி!
இன்னிக்கு முழுசும் உன் நினைப்பு தான் அம்மாயி
ஆனா உன்பேருல ஏதாவது பண்ணுவேன் அம்மாயி
உன்ன போல உள்ளவர்களுக்கு!
அம்மாவை இழந்தவங்க தன்னோட அம்மாவே தனக்கு மகளா பிறக்கணும்னு வேண்டுவாங்க, நான் என் அம்மாயி என் மகளா எங்க வீட்டுல பிறக்கணும்னு வேண்டுறேன். அம்மாயி உனக்கு நான் ஆசைப்பட்டதெல்லாம் செய்யணும் அம்மாயி, எப்போதும் உன் நினைப்பு இருக்கும் அம்மாயி…
— சி.அருள்பாண்டியன், மன்னார்குடி
(2050 மாசி மாத மின்னிதழிலிருந்து)